Sunday, November 25, 2007

ராமாயணம் கண்ட ராமேஸ்வரம்

நானும் என் கணவரும் போன வருடம் ராமேஸ்வரம்,தனுஷ்கொடி மற்றும் பல இடங்களூக்குச் சென்று வந்தோம்.வெகு காலமாக நாங்கள் போக நினைத்திருந்த இடங்களில் ஒன்று இந்த ராமேஸ்வரமும்.விடியற்காலை ராமனாதபுரத்தை அடைந்தோம்.அங்கிருந்து ஒரு டாக்சி ஏற்பாடு செய்து கொண்டு தேவிப்பட்டினத்தை அடைந்தோம். அங்கு ஒரு வீட்டில் தங்கிகொண்டு குளித்து முடித்து சுத்தமாகப்போய்
நவபாஷாண நவகிரகத்தை பூசை செய்து விட்டு(இந்த நவகிரகத்தைதான் ராமர் பூசை செய்து வழிபட்டு தோஷங்கள் நீங்கப்பெற்றார் என்பது ஐதீகம்) . அங்கிருந்து திருப்புல்லணிக்குச்சென்றோம். திருப்புல்லாணியில் ராமர் படுத்திருந்த கோலத்திலிருந்தார்.அவர் சீதையைப்பிரிந்து மிக்க வருத்ததுடன் , சீதையை அடைவது எப்படி என சிந்திக்கும் திருக்கோலம் எங்களை மிகவும் சிந்திக்க வைத்தது ராமாயணத்தைப்ப்பற்றி.அங்கு படுத்த வண்ணம்தான் திட்டங்கள் தீட்டுகிறார் ராமர் என்று சொன்னார்கள். அனுமனும், சுக்ரீவனும் மற்ற துணைகளும் சூழ கோலம் கொன்டிருக்கும் ராமனைக்கன்டோம். அங்கிருந்து ராமேஸ்வரம் கிளம்பினோம். மாலை ராமேஸ்வரம் போய்ச் சேர்ந்து விட்டோம்.ராமேஸ்வரம் செல்லும் பாதையிலிருக்கும் பாலமும் அதன் அழகும் சொல்லி மாளாது. அந்த பாலத்தில் நாம் பயணிக்கும் போது சுற்றித்தெரியும் இடங்களெல்லாம் கடல் சூழ்ந்திருப்பது மிக அழகு.இயற்கையை ஏன் இவ்வளவு கவிஞர்கள் புகழ்ந்திருக்கிறார்கள் என்பது அந்த இடங்களைப் பார்க்கும்போது தெரிகிறது.
மறுநாள் காலை ராமேஸ்வரத்தில் நாங்கள் முன்னோர்களுக்குச் செய்ய வேன்டிய காரியங்களைச் செய்து விட்டு (இந்துக்கள் ராமேஸ்வரத்தில் முன்னொர்களுக்குச் செய்வது வழக்கம்)அன்று மாலை ராமேஸ்வரத்திலுள்ள ராமனாதர் கோவில் , கந்தர்வ‌ மலைக்கு(இந்த மலை மீது நின்றுதான் ஹனுமன் கடலைப்பர்த்ததாகவும்,அங்கிருந்துதான் தாவி இலங்கைக்குப் போனதாகவும். ராமாயணம் சொல்கிறது)சென்றோம் . அந்த மலை மீது நாங்கள் நின்று பார்த்துக்கொன்டிருந்த போது எங்கள் மகனிடமிருந்து(அவன் வெளிநாட்டில் இருக்கிறான்) மொபைலில் போன் வந்தது. அவன் சின்னக்குழந்தையைப்போல் அந்தமலை மேலிருந்து இலங்கை தெரிகிறதா என்று கேட்டான்.(சிறு வயதில் படித்த அமர்சித்ர கதாவின் தாக்கம்)அங்கிருந்து பார்த்தால் சிறுசிறு தீவுகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தெரிகின்ற‌ன. ஒருவர் நன்கு நீந்தத்தெரிந்தவராக இருந்தால் விட்டுவிட்டு நீந்தி விடலாம் போலத்தான் தோன்றியது. ராமாயணம் படித்தவர்களுக்கு மயிர்கூச்செரியும் அனுபவங்ககள் தரும் இடம் இந்த ராமேஸ்வரம். மற்றும் சில இடங்களுக்குப் போய் விட்டு அன்று இரவு ஓய்வெடுத்து நன்றாகத்தூங்கினோம்.
மறு நாள் காலை ராமனாதர் கோவிலுக்குச் சென்று மரகத லிங்கத்தை தரிசனம் செய்து விட்டு(காலை 4மணி முதல் 5 மணி வரைதான் இந்த லிங்கத்தை வெளியில் வைத்து பூசை செய்வார்கள்)வந்தோம். ராமேஸ்வரம் ராமனாதர் கோவில் என்பது ஒருவர் வாழ்நாளில் பார்க்க வேன்டிய ஒரு கோவில்.மிகப்பெரிய கோவில். பல சன்னதிகள். அழகிய வேலை பாட்டுடன் கூடிய ஒப்பற்ற‌ மன்டபங்கள்.கடலை நோக்கி அமைந்திருக்கும் இந்த கோவில் ஒரு அற்புதமான படைப்பு.
ராமேஸ்வரம் ஒரு தீவு .அதன் முக்கிய ஜீவாதாரத்தொழிலே மீன்பிடிக்கும் மீனவர் தொழில்தான். கடல்தான் இவர்களுக்கு கடவுள்,தாய்.தந்தை எல்லாம்.எங்கு பார்த்தாலும் மீன் வாடை அடித்துக்கொன்டேதான் இருக்கும். கடற்காற்றும், மீன்வாடையும் இங்குள்ளவர்களுக்கு, இல்லாமலிருக்க முடியாது என்பது போல மூச்சோடு கலந்த ஒரு விஷயம்.கிளிஞச‌ல்களில் வேலைபாடுகள் செய்து பல விதமான பொருட்களைச் செய்து விற்பது பலருடைய தொழில்.சுற்றுலாப்பயணிகள் இந்த ஊரின் மிகப்பெரிய வருமான
சாதனம்.மறுநாள் எழுந்து ஜீப்பில் தனுஷ்கோடிக்குப் பயணமானோம்.ஜீப் கடல் மணலில் ஓடியது.
ஜீப்பில் போகும்போது நாலு புரமும் எங்கு நோக்கினும் மண‌ல்..மணல்..அதைப்போல பிரம்மான்டமான மணல் வெளியை நான் சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். இடையிடையெ ஆங்காங்கு சிறிய கூடரம் போன்ற அமைப்புகள். மீனவர்களின் இருப்பிடங்கள் என்று கூட வந்தவர் சொன்னார். அங்கு எங்கள் மொபைல் வேலை செய்ய வில்லை,டவர் இல்லாத காரணத்தால்.மேலே இந்திய‌ ராணுவ கடற்படை விமானங்கள் பறந்த வண்ணமிருந்தன. இடையிடையே சிலர் கையில் குழந்தையுடனும், மூட்டை முடிச்சுக்களுடனும் வந்து அந்த அத்வானத்தில் நின்று கொன்டிருப்பதையும், ந‌‌டந்து வருவதையும் பார்த்தோம்.அவர்கள்தான் இலங்கைத் தமிழர்கள் என்றும்,திருட்டுப் படகில் இரவில் கிளம்பி, இலங்கையிலிருந்து வந்து இறங்கி அந்த கடல் மணலில் நடந்து வந்து கொன்டிருக்கிறார்கள், என்றும் எங்களுடன் வந்தவர் கூறினார். எங்களுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது அவர்களைப் பார்க்க.
ஆனால் சிறிது நேரத்திலேயே அங்கு ஒரு ராணுவ விமானம் ப‌றந்தது. எங்களுடன் கூட வந்தவர் ராமெஸ்வரத்தைச்சேர்ந்தவர்.அவருக்கு இது ஒரு புதுமையானதாகவே இல்லை.
இன்னும் சற்று நேரத்தில் ராணுவம் வந்து இந்த அகதிகளை அழைத்துச் சென்று விடும் என்று கூறினார்.எங்களுக்கு இந்த சூழ்நிலை மிகவும் வினோதமாக இருந்தது.
சற்று தூரம் சென்றவுடன் கோதண்ட ராமர் கோவில் .வந்தது.அங்குதான் விபிடணனுக்கு ராமர் சரணகதி தந்ததாகவும்,இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது அவருக்கு பட்டபிஷேகமும் அங்குதான் நடத்தினதாகவும் கூறினார்கள்.
‌அங்கிருந்து கிளம்பி திரும்ப ஜீப்பில் பயணித்தோம். 15 நிமிடத்தில் தனுஷ்கோடியை அடைந்தோம்.வெட்ட வெளி, நான்கு புற‌மும் கடல்,கடல் காற்று,கடல் நீர் கண்ணுக்கெட்டிய தூரம் வரை,உதித்து வரும் இளம் சூரியஒளி,திரும்பிப்பார்த்தால் நிலம்கற்பனை பண்ண முடியாத ஒரு சுழல். ஐம்பெரும் சக்திகளும் மட்டும் சாட்சியாக நானும் என் கணவரும் கை பிடித்தபடி கடலில் நீராடினோம். கடல் அலைகள் எங்களை நீராட்டி மேலும் மேலும் துய்மை படுத்துவதாக உணர்ந்தோம்.அந்த அனுபவத்தை யாரும் சொல்லால் விளக்க முடியாது.கடலுக்கும் பூசை செய்து ,பிறகு மணலினாலேயே லிங்கம் பிடித்து வைத்து கையில் எடுத்துப் போயிருந்த பூசைப்பொருட்களை வைத்து அந்த லிங்கத்துக்கு பூசை செய்தோம்.
ராமாயணத்தை விரும்பிப்படிக்கும் எங்கள் பேரக்குழந்தைகள் இல்லையே என்று மிகவும் நினைத்துகொன்டோம்.சில நிமிடங்கள் எங்களை மறக்கச் செய்தது அந்த சூழ்நிலை.
ராமர் இருந்தாரா? அது கதையா என்ற சந்தேகங்கள் சற்றும் எழவில்லை. ராமர் இங்குதான் நின்றார் ,இங்குதான் நின்று கடலைப்பார்த்து இலங்கைக்குப்போக திட்டமிட்டார் என்று எண்ணுபோது அந்த மக காவியம் கண்முன் ஒருமுறை நிகழ்வது போல் இருந்தது. இங்குதான் ராமரும் சீதையும் இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது சிவனை வழி பட்டர்களாம்.
பின் நாங்கள் மற்றும் சில இடங்களுக்குச்சென்று விட்டு சென்னை திரும்பி வெகு நாட்களுக்குப் பின்னும் மனதை விட்டு அகலாமல் நேற்று நடந்தது போல் இருக்கிறது அந்த ராமேஸ்வரம் ,தனுஷ்கோடி பயணம்.

ஆஸ்திரேலியாவில் மைசூர்பாக்

இந்த மைசூர்பாக்கை பதிவில் பார்த்ததும் ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. எனக்கும் இந்த மைசூர்பாக் செய்ய மிக நன்றாக வரும். கடந்த பல வருடங்களாக இதை ஒரு சாதனையாகவே பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.சர்க்கரை பாகுடன் ஒரு கரன்டி நெய் ஊற்றிப்பாருங்கள், நெய் வாசனை இன்னும் தூக்கும். நெய்யை சுடாக்கி கலவையைக் கிளரும்போதுஊற்றுவது கொஞ்சம்ம் கொஞ்ச‌மாக சேர்ப்பது மைசூர்பாக்கை சற்று சிவக்க வைத்து மண‌க்க வைக்கும்.
நான் ஆஸ்திரேலியா போனபோது நான் செய்த மைசுர்பாக்கைப் பார்த்தவுடன் என் பெண் நீ இங்கு ஒரு நல்ல இந்திய ஸ்வீட் கடையில் பகுதி நேரவேலை செய் அம்மா உனக்கு டாலரில் சம்பாதிக்கும் திறமை உள்ளது என்று சொன்னாள். ஆஸ்திரேலியாவில் சமயல் கலைஞர்களுக்கு நல்ல வரவேற்பு. நளதமயந்தி படம் வந்து சில காலமே ஆகியிருந்த காலம். நானும் உற்சாகத்துடனும் மனதில் பல கனவுகளுடனும்(டாலர் கனவுகள் வண்ணவண்ணமாய் பொன்மகள் வந்தால் பொருள் கோடி த‌ந்தாள் டைப்பில்)பல டெக்னிக்குகளைக் கையாண்டு மிக ருசியான ஒரு மைசூர்பாக்கைத் தயாரித்து, மாதிரி காட்டுவதற்குத் தயார் பண்ணினேன்.என் பெண் பல கடைகளுக்குப் போன் செய்து மைசுர்பாக் செய்ய ஆள் தேவையா என்று விசாரித்தாள்.
இடைஇடையில் எனக்கு தொழிலில் பேதம் கிடையாது என்றும் எந்தத் தொழிலும் உயர்வு தாழ்வு இல்லை என்றும், எதையும் நேர்மையாகச் செய்து முன்னெற முடியும் என்றும் ஓயாமல் அட்வைஸ்.கடைசியில் ஒரு கடைக்காரர் இன்னும் சில ஸ்வீட்டுகள் பெயரைச் சொல்லி அவைகளைச் செய்யத்தெரியுமா? என்று கேட்டார். தெரியுமென்று பதில் கூறி செய்து வைத்திருந்த மைசூர்பாக்கை எடுத்துக்கொன்டு நானும் என் பெண்ணும் (அப்போதெ கணக்குப் பார்க்கத் தொடங்கிவிட்டோம் ஆகையால் காரில் போகவில்லை)பஸ் பிடித்து ரயில்வேஸ்டேஷன் போய், அங்கிருந்து ரயிலில் நடுவில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் பிளாட் பாரம் மாறி, மற்றொரு ட்ரெயின் பிடித்து வேறொரு இடத்துக்குப்போய் அங்கிருந்து நடந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்து போய் அந்தக் கடையைப் பிடித்தோம். அக்கடைக்கரருக்கு எங்கள் மைசுர்பாகை மிகவும் பிடித்து விட்டது.மற்ற ஸ்வீட்டுகளைப் பற்றியும் நேர் முகத்தேர்வு நடதிவிட்டு என்னை (ஒரு மணி நேரத்துக்கு 10 டாலர் தருவதாகக்கூறி)ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் வேலை தருவதாகக்கூறி தேர்வு செய்தார் ஒரு கன்டிஷனுடன். யாராவது ஹெல்த் இன்ஸ்பெக்டர் என்னைப்பிடித்தால் நாங்கள் எங்களுக்கு உங்களை தெரியாது என்று கூறி விடுவோம் என்பதே அந்தக்கன்டிஷன். நாங்களும் வெளி நாட்டில் ஒரு வேலை எப்படியும் பிடித்து விடுவது என்று வெறியுடன் ஒத்துக்கொன்டு வந்து விட்டோம்.ஒரே மழை பிடித்துக்கொன்டு திரும்பி வரும்பொழுது இருட்டி விட்டதால் வீட்டில் எல்லொரும் கவலையோடு உட்கார்ந்திருந்தனர்.எல்லொரிடமும் நாங்கள் வேலை பிடித்து விட்டதையும் கடைக்காரர் எங்களுடைய மைசூர்பாக்கைக் கன்டு மயங்கி நின்ற காட்சியையும் விவரித்து அன்று யாரும் கோபப்படாமல் செய்து விட்டோம்.
என் மருமகன் மிக நல்ல பதவியில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இருப்பவர். எனக்கு அவர் எதிரே இதெல்லாம் பேசவே மிகக் கஷ்டமாக இருக்கும். என் மகள் ரொம்ப தைரியமானவள் போல பேசிக்கொன்டிருப்பாள்.
அன்று இரவு நானும் என் பெண்ணும் போகவர சிலவு மற்றும் சம்பளம் எல்லாம் கணக்குப் பார்த்தோம். நேரமும் சுமர்ர் 4மணி நேரம் பிரயாணத்திலேயே கழிந்திருந்தது.கூட்டிக் கழித்துப்பர்த்தால் 8 மணி நேரம் செலவழித்தால் (அதுவும் தனியாக நான் புது நாட்டில்)10டாலர் மிஞ்சியது.அப்போதுதான் அந்த ஊருக்குப்பொயிருந்ததால் ஊரும் பழகியிருக்கவில்லை.எங்கு பார்த்தாலும் எஸ்கலேட்டர்கள் .தனியாகப்போகவே கஷ்டமாயிருக்கும்போல் தோன்றியது.குளிர் மழை இதெல்லாம் வேறு பயமுறுத்தியது.மறு நாள் எழுந்து வேலைக்குப்பொவதைப்பற்றிப் பேசவேயில்லை நான்.10டாலர் மிக நல்ல பணம் (ஆனால் அருகிலேயே எதாவது ஒரு ஸ்வீட் கடையில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும்) என்று எதேதோ என் பெண் சொல்லிக்கொன்டிருந்தாள்.அம்மா தாயே என்னை விடு எனக்கு டாலரும் வேன்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி மறுத்து விட்டேன். பேரப்பிள்ளைகளுடன் காலத்தைக்கழித்து விட்டு திரும்ப சென்னை வந்து சேர்ந்தேன்.மைசூர்பாக் என்றாலே எனக்கு இந்த நிகழ்ச்சிதான் நினைவுக்கு வரும். ஆஸ்திரேலியா

எங்கள் அன்புக்குரிய சின்னி

தீபாவளி என்றால் எல்லொருக்கும் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். எனக்கு எங்கள் வீட்டில் இருந்த ஒரு செல்லப்பிராணிதான் நினைவுக்கு வருகிறது.செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்பது ஒரு தனி அனுபவம். கிட்டத்தட்ட வாழ்வின் அங்கமாகமே மாறி விடுகிற ஒரு பெரிய விஷயம் அது என்றுதான் சொல்ல வேன்டும். செல்ல பிராணி எதுவும் வளர்க்காதவர்களுக்கு அந்த உணர்வு சற்றும் புரிய வாய்ப்பில்லை.

என் வீட்டில் 1984 ஜுன் மாதம் ஒரு அழகிய போமெரேனியன் குட்டி நாய் வந்தது.அது வந்த தினத்தில் நாங்கள் மூன்று பேரும் மிகவும் excited ஆக இருந்தோம். நங்கள் மூன்று பேர் என்றால் நான் ,என்மகன் , என்மகள்.என் கணவர் அவ்வளவு சுவாரஸ்யம் காட்ட வில்லை.அவருடைய அக்கா என் மகனின் வேன்டுகோளுக்கு இரங்கிக் கொன்டு வந்திருந்ததால் வெறுக்கவும் இல்லை.
அந்தக்குட்டிக்கு என்னென்ன உணவு கொடுக்க வேன்டும் ,எப்படி வைத்துக்கொள்ள வேன்டும்,வெய்யிலுக்கு எப்படி பாதுகாக்க வேன்டுமென்பதெல்லாம் தெரிந்து கொன்டோம் மிக கவனமாக.அதற்கென தனி பவுடர் ,சோப்பு, பிரஷ் முதலியன வாங்கப்பட்டன.மிருக டாக்டரிடம் அழைத்துப்போய் அதற்கு தொற்று நோய்கள் வராமல் இருப்பதற்கு ஊசி போட்டு அதற்கான தனி புத்தகம் ஒன்று (history of the dog)வைத்துக்கொன்டோம்
வீட்டில் எப்போதும் நாய் பற்றிய பேச்சுதான்.அதற்கு சின்னி என்று பெயர் வைத்து இரன்டு குழந்தைகளுடன் மூன்றாவது குழந்தைபோல் அது வீட்டில் நடமாடி வந்தது.இரன்டு மாதக்கூட்டியாக வந்தது கொஞ்சம் கொஞ்சமாக வளரத்தொடங்கியது.

என்னுடைய இரன்டு குழந்தைகளும் சின்னி மீது அளவுக்கு மீறிய பாசம் வைத்திருந்தனர்.அதுவும் எங்களிடம் ஒரு நாய் போலவே நடந்து கொள்ளாது.இரவில் எங்கள் பக்கத்தில்தான் படுத்துக்கொள்ளும். தனியாக ஒரு ரூமில் போட்டு விட்டு கதவை மூடிக்கொன்டு வந்தால் ஒடிவந்து எங்கள் ரூம் கதவை கால்களால் பிறாண்டி எங்களைத் தூங்க விடாமல் செய்து எப்படியோ எங்கள் ரூமுக்கு வந்து விடும்.
எங்கள் வீடு முதல் மாடியில் இருக்கும். அந்தப் படிக்கட்டு வழியே யார் நடந்து போகும் சத்தம் கேட்டாலும் ஒடிப்போய் மூடியிருக்கும் எங்கள் வீட்டு வாயிற்கதவு அருகே பொய் கீழே இருக்கும் இடைவெளி வழியே முகர்ந்து பார்க்க முயற்ச்சிக்கும்.கொஞ்ச‌ காலத்திலேயெ தினமும் அந்த மாடிப்படி வழியே வந்து போகும் அனைவரது காலடிச்சத்ததையும் இனங்கண்டு கொள்ளத் தெரிந்து கொன்டு விட்டது. சின்னி தன்னை வெறுப்பவர்களையும், அன்புடன் பார்ப்பவர்களையும் அறிந்து கொன்டு விடும்.தன்னைக்கண்டு பயப்படுகிறவர்களையும் சின்னி வெறுப்பவர்களகவே புரிந்து கொண்டதுதான் ரொம்ப கஷடமன விஷயம்.சின்னி நமக்கு வேன்டியவர்களையும் வேன்டாதவர்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அதிசயமாக இருக்கும். நாம் அவர்களை நடத்துகின்ற விதத்தில் சின்னிக்கு அவர்களைப்பற்றி ஒரு அபிப்பிராயம் வந்து விடும்.
என் அம்மா ஊரிலிருந்து வந்தால் அவர்கள் பக்கத்தில் என் பிள்ளைகள் எப்படி அருகே போய் பழகுவார்களோ அதே போல் தானும் இருக்க முயற்ச்சிக்கும். அவர்களோ இதை ஏற்றுக்கொள்ள யோசிப்பார்கள். ஆனால் சின்னி ஏற்றுக்கொள்ள வைத்து விட்டது . என் பெண் ஸ்கூலிலிருந்து வரும் நேரம் சரியாகத் தெரியும். அந்த நேரம் நெருங்கியதுமே வாயிற்படி அருகே ஒரு இடத்தில் சரியாகப்போய் படுத்துக்கொள்ளும். அவள் காலடியோசை படிகளில் கேட்டவுடன் காதை மடக்கி உறுதி செய்து கொள்ளும். அவள்தான் என்று உறுதி செய்து கொன்டு சின்னி தாவிக்குதித்து என்னருகே வந்து அவள் வந்து விட்டதை இங்குமங்கும் ஓடித்தெரிவித்து என்னை வாயிற்கதவைத் திறக்கச் சொல்லும். நான் வாயிற்கதவைத் திறந்தவுடன் அவள் மீது பாய்ந்து , அவள் மிது ஏறிக்குதித்து விளையாடி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளும் விதமே தனிதான்.அதை விவரிக்கவே முடியாது. அவள் முகம் கழுவி எதாவது சாப்பிடட்டும் என்பது போல் கொஞ்சம் போய் உட்கார்ந்து கொள்ளும். அவள் விளையாட நண்பர்களுடன் போனால் சின்னியும் கூடப்போய்விடும்.shuuttle விளையாட‌ தன் நண்பர்களுடன் அவள் போனால் யாராவது இவள் அடித்த பந்தை அடித்தால் சின்னிக்குகோபம் வந்து விடும்.அவர்களை பார்த்துக்குரைக்கும்.
சங்கிலி போட்டு அதைக்கட்ட முடியாது. எல்லொரும் சங்கிலி போட்டுக்கட்டுங்கள் என்பார்கள். ஆனால் சின்னியை சங்கிலி போட்டுக் கட்டினால் குலைத்து சஙிலியை இழுத்து என்னவோ செய்து அதைக்கழட்ட வைத்து விடும். சில சமயங்கலைல் அழுது அமர்க்களம் பண்ணிக்குட சங்கிலியை அவிழ்க்க வைத்திருக்கிறது.
எங்கள்வீட்டு வாசலில் ஒரு இஸ்திரி போடுபவர் இருப்பார். அவர் எங்கள் காலனியில் இருந்த எல்லோருடைய துணிக்கும் இஸ்திரி போட்டுத் தந்து தன் காலத்தை தள்ளிக் கொன்டிருந்தார். அவரைப்பர்த்து ஒருனாள் சின்னி குரைக்க அவர் பயந்து தான் இஸ்திரி போட்டுக்கொன்டிருந்த துணியை சின்னி மேல் வீசி சீச்சீ என்று சொல்லிவிட்டார். அன்றிலிருந்து சின்னி அவரையோ அவருடைய குடும்பத்தாரையோ கன்டால் குலைத்து ஒரு வழி பண்ணிவிடும். அவர் எப்போதாவது சின்னி பால்கனியில் நின்று கொன்டிருக்கும்போது வெளியில் தென்பட்டாரென்றால் குலைத்தே அவரை ஒரு வழி பண்ணிவிடும். அந்த செயலை கடைசி வரை எங்களால் மாற்றவே முடியவில்லை.இன்னொரு அதிசயம் என்னவென்றால் ஒருவரைப்பற்றி அதற்கு என்று ஒரு அபிப்பிராயம் உருவாகிவிட்டால் அதை மற்றிக்கொள்ளாது.
என் பிள்ளை சின்னிக்குக் மிக‌ உயர்ந்த சோப்புக்களைப்போட்டுக் குளிப்பாட்டி , நன்கு துடைத்துவிட்டு, பவுடரையும் போட்டு விட்டு, பால் வைத்து, பிரஷ் பண்ணி விட்டால் மிக தைரியமாக பயப்படாமல் நின்று செய்து கொள்ளும்.அவனிடம் அப்படி ஒரு நம்பிக்கை. அவனும் என் கணவருமோ அல்லது அவனும் என் மகளுமோ கத்தி சத்தம் போட்டு சன்டையிட்டால் இருவரிடமும் பொய்க் கெஞ்சுவது போல் மாற்றி மாற்றி காலை பிராண்டி சும்மாயிருங்களேன் என்பது போல் செய்யும்.அவர்களும் சின்னிக்காக தங்கள் நிலையைக்கொஞ்சம் விட்டுக்கொடுப்பார்கள்.
மதிய‌ வேளையில் எல்லோரும் காலேஜ் மற்றும் அலுவலகம் போன பின் நான் பாங்கு மற்றும் தபாலாபீஸ் போனால் சின்னியும் கூட ஓடி வருவது அந்த ஏரியாவில் எல்லொருக்கும் ஒரு பழகிப்போன காட்சியாயிருந்தது.
யாரையாவது பார்த்துக் குரைக்கத் தோன்றினால், குரைத்து விட்டு வந்து, என்பக்கத்தில் நெருக்கமக உட்கார்ந்து கொன்டு, தான் செய்வது எனக்கு வருத்ததைத்தரும் நான் ஏன் அவர்களைப்பர்த்து அனாவசியமாகக் குரைக்கிறாய் என்று திட்டுவேன் என்ற குற்ற உணர்வோடு என்னைப்பர்த்து விட்டு என் மீது சாய்ந்து கொன்டு படுதுக்கொள்ளும்.அதே போல் சந்தொஷத்தைத் தெரிவிக்கும் முறையும் மிக அழகாகச் இருக்கும்.‌ அக்கம்பக்கத்தில் சில பேர் அதன் அன்புக்குப் பாத்திரமாகாதவர்கள் அதைச் சத்துருவாக நினைப்பார்கள்.சில பேர் கெட்டிக்காரத்தனமாக அதை அன்பால் கவர்ந்து விடுவார்கள். சின்னிக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் என் பெண் அல்லது பிள்ளையுடன் விளையாடுவதும், நாங்கள் அனைவரும் உட்கார்ந்து டி வி பார்த்துக்கொன்டிருந்தால் நடுவில் அதுவும் உட்கார்ந்து பார்ப்பது,பேசிக்கொன்டிருந்தால் சோபாவில் அதுவும் உட்கர்ந்து, காதை உயர்த்தி வெளியில் கேட்கும் ஒவ்வொரு சத்தத்துக்கும் react
பண்ணுவது.அப்படிப்பண்ணும்போது சின்னிக்கு என்னமோ தாந்தான் எங்களைகாவல் காப்பது போல் ஒரு நினைப்பு இருப்பது எங்களுக்கு (பழகினவர்களுக்கு)தெரியும் .அன்னால் இவ்வளவு ஸாகசம் செய்கிற சின்னி தீபாவளி சமயத்தில் பட்டாசு சத்தம் கேட்டால் மட்டும் நடு நடுங்கிப்போய் சோபா அல்லது கட்டில் அடியில் போய் கண் மறைவாகப் படுத்துக்கொன்டு பயந்து நடுங்கும்.வெளீயே கொன்டு வர நாம் எடுக்கும் முயற்சி யெல்லாம் தோற்றுப்போகும். சின்னியைப்பற்றி எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. மிக சிலவற்றைத்தான் சொல்லியிருக்கிறேன். நீங்களும் எங்கள் சின்னியைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்!